Tuesday, October 23, 2012

துப்பாக்கி, கும்கி, போடா போடி உள்பட 7 படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ்

துப்பாக்கி, கும்கி, போடா போடி உள்பட 7 படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ்
தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 13-ந் தேதி எத்தனை படங்கள் ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக் கொண்டு உள்ளது. ரஜினியின் 'கோச்சடையான்', கமலின் 'விஸ்வரூபம்' படங்கள் தள்ளிப்போகின்றன. பெரிய பட்ஜெட் படமான சூர்யாவின் 'மாற்றான்' தீபாவளி போட்டியில் பங்கேற்காமல் முன்கூட்டியே ரிலீசாகி விட்டது.

தற்போதைய நிலவரப்படி 'துப்பாக்கி', 'கும்கி', 'போடா போடி', 'அம்மாவின் கைப்பேசி', 'கள்ளத்துப்பாக்கி', 'அஜந்தா', 'லொள்ளு தாதா பராக்பராக்' ஆகிய 7 படங்கள் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ளது.

'துப்பாக்கி'யில் விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். மும்பை குண்டு வெடிப்பை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. 'போடா போடி'யில் சிம்பு நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். காதல் கதையாக தயாராகியுள்ளது. 'கும்கி' படத்தில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரபு சாலமன் இயக்கியுள்ளார். யானையை அடக்கும் இளைஞனை பற்றிய கதை. லிங்குசாமி இப்படத்தை தயாரித்துள்ளார்.

'அம்மாவின் கைபேசி' படம் தாய்க்கும், மகனுக்குமான பாச போராட்டத்தை விளக்கும் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. தங்கர் பச்சான் இயக்கியுள்ளார். பாக்யராஜின் மகன் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார். ரவிதேவனின் 'கள்ளத்துப்பாக்கி' திரில்லர் படமாக தயாராகியுள்ளது. 'லொள்ளு தாதா பராக் பராக்' படத்தில் மன்சூர்அலிகான் நாயகனாக நடித்துள்ளார். கந்து வட்டியை மையமாக வைத்து காமெடி படமாக தயாராகியுள்ளது. 'அஜந்தா' படத்தை ராஜ்பா ரவிசங்கர் திருமால் இயக்கியுள்ளனர். காதல் கதையாக தயாராகியுள்ளது.

மாலைப் பொழுதின் மயக்கத்திலே நாயகி சுபா பட்டேலா மரணம்

மாலைப் பொழுதின் மயக்கத்திலே' பட நாயகி சுபா பட்டேலா மரணம்
'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் சுபா பட்டேலா. பெங்களூரைச் சேர்ந்த இவர் மிஸ் பெங்களூராகவும் தேர்வானவர். தன்னுடைய முதல் படத்திலேயே நடிப்பாலும், அழகாலும் தமிழ் சினிமா ரசிகர்களை கிறங்கடித்தவர்.

'மாலைப் பொழுதின் மயக்கத்திலே' படத்திற்கு பிறகு தமிழில் அவருக்கு படங்கள் அமையாததால் தெலுங்கு பக்கம் போய், அங்கு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட இவர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த ஒரு வாரத்திற்கு முன் கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து நேற்று இரவு அவர் திடீரென மரணமடைந்தார்.

இவருடைய மரணம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா வட்டாரங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Popular Posts