நடிகர் திலகத்துக்கு இன்று பிறந்த நாள்: சூறாவளியாய் கலக்கிய சிவாஜிகணேசன் நடிகர் திலகத்துக்கு இன்று பிறந்த நாள்: சூறாவளியாய் கலக்கிய சிவாஜிகணேசன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு இன்று 85-வது பிறந்தநாள். 1952-ல் 'பராசக்தி'யில் குணசேகரனாக அறிமுகமாகி 1999 வரை திரையுலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்தார்.
பாடல்களே படங்களாகவும் பாட தெரிந்தவர்களே பெரும் நடிகர்களாகவும் இருந்த நியதிகளை உடைத்தெரிந்து வசன உச்சரிப்பாலும் நடிப்பு பரிமாணங்களாலும் ரசிகர்களை தன் வசம் கவர்ந்தார்.
'மனோகரா', 'திருவிளையாடல்', 'தங்க பதக்கம்' படங்களில் அவர் பேசிய வசனங்கள் நெருப்பை கக்கின. திரையுலகில் 50 ஆண்டுகள் சூறவாளியாய் கலக்கினார்.
வீரபாண்டிய கட்டபொம்மனையும், கப்பலோட்டிய தமிழனையும், வாஞ்சிநாதனையும், பகத்சிங்கையும் கண்முன் நிறுத்தினார். ராஜராஜசோழன் போன்ற சரித்திர புருஷர்களையும் கடவுள்களையும் சிவனடியார்களையும் மனக்கண்ணில் கொண்டு வந்தார்.
பத்மஸ்ரீ, பத்மபூஷன், டாக்டர், செவாலியே என எண்ணற்ற பட்டங்களை அவர் பெற்று இருந்தாலும் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எவரும் பெறமுடியாத நடிகர் திலகம் பட்டத்தை அவர் பெற்று இருந்தார்.
இளம் தலைமுறை நடிகர்கள் வசங்களை பேசியோ இன்றும் நடிப்பு பயிற்சி பெறுகின்றனர். அண்ணன் தங்கை பாசத்தை சித்தரித்த 'பாசமலர்', ஒன்பது வேடங்களில் வித்தியாசம் காட்டி ஆச்சரியப்படுத்திய 'நவராத்திரி', கர்ணனை காட்சிபடுத்திய 'கர்ணன்' படம் 'தில்லானா மோகனாம்பாள்', 'வியட்நாம் வீடு', 'வசந்தமாளிகை' என எண்ணற்ற காவிய படங்களை தமிழ் பட உலகுக்கும் தமிழர்களுக்கும் தந்தார்.
நடிப்புலக மேதை சிவாஜி இன்று நம்மிடையே இல்லை என்றாலும் அவர் விட்டுச்சென்ற கதாபாத்திரங்கள் மூலம் என்றென்றும் தமிழர்கள் நெஞ்சில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
0 comments:
Post a Comment