இதுகுறித்து நார்வே தமிழ் திரைப்பட விழா குழு சார்பில் இன்று வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :
பெருமைக்குரிய நார்வே தமிழ் திரைப்பட விழாவின் 4-ஆம் ஆண்டு குறும்பட போட்டிக்காக படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் இசை வீடியோக்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த நிகழ்வானது எதிர்வரும் மார்ச் மாதம் 10 தேதி ஆஸ்லோவில் உள்ள Nedre Fossum Gard -Stovner என்னும் இடத்தில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணிவரை நடக்கவிருக்கிறது.
உலகம் முழுவதும் பரந்து வாழும் கலைஞர்களிடம் இருந்து படைப்புகளை எதிர்பார்க்கிறோம்.
எமக்கு கிடைக்கபெறுகின்ற உங்கள் படைப்புகளில் இருந்து 20 குறும்படங்கள், 10 ஆவணப்படங்கள், 10 இசை காணொளிகள் (Music video) தெரிவு செய்யப்பட்டு திரையிடப்படும்.
இவற்றிலிருந்து இரண்டு குறும்படங்களுக்கு, இரண்டு ஆவணப்படங்களுக்கு, ஒரு காணொளி காட்சிக்கும் தமிழர் விருது வழங்கப்படும்.
இந்த ஆண்டின் சிறப்பம்சமாக தமிழ் சினிமா துறை தவிர்த்த கலைஞர்களிடம் இருந்து வருகின்ற சிறந்த பாடல் காட்சிகளை தேர்ந்தெடுத்து தமிழர் விருது வழங்கத் திட்டமிட்டுள்ளோம். நார்வே திரைப்பட விழாக்குழு தேர்ந்து எடுக்கும் சிறந்த 10 காணொளிகளை, வசீகரன் இசைக்கனவுகள் நிறுவனம் டிவிடி வடிவில் இந்த ஆண்டு வெளியிடவிருக்கிறது.
குறும்பட போட்டிக்கான விதிமுறைகள்:
+ தமிழ் மொழியையும், தமிழர்களுடைய கலை, கலாச்சாரத்தை அடையாள படுத்துவதாக இருக்கவேண்டும்.
+ திரைப்படத்தில் சொல்லப்படுகின்ற கருத்து தமிழ் சமூகத்தை நல்வழிப் படுத்துவதாக அமையவேண்டும்.
+ உலகத் தமிழர்களின் இன்ப, துன்பங்களைப் பேசுவதாகவும், தமிழர்களின் நியாயமான விடையங்களுக்கு பாதகமற்ற முறையில் இருக்கவேண்டும்.
+ இணையங்களில் ஏற்கெனவே வெளியான குறும்படங்களாக இருந்தால் எமது கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.
+ நார்வே தமிழ் திரைப்பட விழாவிற்கு பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட குறும்படங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
+ ஏற்கனவே வெளியீடு செய்யப்படாத படங்களாக இருந்தால் வரவேற்கப்படும்.
+ குறும்படங்கள் 25 நிமிடங்களுக்கும், ஆவணப்படங்கள் 60 நிமிடங்களுக்கும், காணொளி 5 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.
+ குறும்படங்கள் 01.01.2012 இல் இருந்து 25.02.2013 தேதிக்கு முன் தயாரிக்கப்படாததாக இருக்கவேண்டும்.
+ அனைத்து குறும்படங்கள், ஆவணப்படங்களுக்கும் ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் அவசியம்.
+ தேர்வு செய்யப்பட்ட / செய்யப்படாத படைப்புகள் எதுவும் எம்மால் திருப்பி அனுப்பி வைக்கப்படமாட்டாது.
+ படைப்புகளை அனுப்ப கடைசி தேதி 25.02,2013.
+ நடுவர் குழு பார்வைக்கான டிவிடி அல்லது புளூ ரே இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவேண்டும்.
+ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நார்வே தமிழ் திரைப்பட விழா வரும் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி நிறைவடைகிறது.
மேலும் விபரங்களுக்கு http://www.ntff.no என்ற இணைய முவரிக்கு செல்லலாம்.